14 April 2018

காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)

எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவாச ராமானுஜன் படித்த அறை என்று பொருள்படும்படி காணப்பட்ட குறிப்பே அது. நாங்கள் படித்த காலத்தில் இவ்வாறான குறிப்பு காணப்படவில்லை. இந்த அறையைப் பற்றி இது தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. புகுமுக வகுப்பு படித்த காலகட்டத்தில் இதற்கு அடுத்த அறையில் நண்பர்களின் வகுப்பறை இருந்ததால் பல முறை இந்த அறையின் வழியாக சென்றது நினைவிருக்கிறது. இதையொத்த பல அறைகளுடன் ஒப்புநோக்கிய போது இந்த அறையின் சிறப்பான பராமரிப்பிற்கான காரணத்தை இப்போது அறிய முடிந்தது. தன் தளத்தில் திரு கரந்தை ஜெயக்குமார் இதன் பெருமையைப் பகிர்ந்துள்ளார். 
அடுத்து பார்க்கும்போது அந்த அறைக்கு வெளியே கணித மேதை ராஜமானுஜன் கல்விபயின்ற வகுப்பறை என்ற குறிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் காணப்பட்டது. அப்போது தெரியாவிட்டாலும் இப்போது தெரிந்ததே என்ற மகிழ்ச்சி மனதில் ஏற்பட்டது. கணித மேதை படித்த அறையின் அடுத்து நான் படித்த வகுப்பறை இருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டேன்.  
அப்பகுதியில் ஒன்றோடோன்று இணைந்துள்ள நிலையில் அமைந்துள்ள வகுப்பறைகளின் அமைப்பு படிப்பதற்கான ஒரு சூழலையும் மனதில் அப்போது ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.   வாயிலில் காணப்பட்டது போன்றே இப்பகுதியிலும் தூண்களிலும் உத்தரங்களின் தாங்கு பலகைகளிலும் மிக அழகான மரச் சிற்பங்கள் உள்ளதைக் காண முடியும். அடுக்கடுக்காக வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மர உத்தரங்களின் அழகு கட்டடங்களின் கம்பீரத்தை எடுத்துரைப்பதைக் காண முடியும்.   
வாயிலின் காணப்பட்ட தூண் சிற்பங்கள் இங்கும் தொடர்கின்றன. அதாவது மணிக்கூண்டின் தரை தளத்தின் இரு புறமும் இவ்வாறான தூண்கள் அமைந்துள்ளன. அவற்றின் நேர்த்தியும் பிற எவற்றுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு இருப்பதைக் காணலாம்.  
காலனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற (லிங்கத் திருமேனிக்கு மேலே காணப்படுகின்ற) சிவபெருமான், குடந்தைக்கிடந்தான் என்று ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாம்பணையில் அனந்த சயனத்தில் கிடக்கின்ற பெருமாள், லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா உள்ளிட்ட பல மரச் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றன. (சிற்பத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள பேனாவின் அளவினைக் கொண்டு சிற்பத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.)
மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற சிவபெருமான்
அனந்த சயனத்தில் பாம்பணையில் பெருமாள்

லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா
அருகேயுள்ள மற்றொரு வகுப்பறையில் எங்களுக்கு இரண்டோ, மூன்றோ சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. முன்புறம் அரை வட்ட வடிவத்திலும் தொடர்ந்து செவ்வகமாகவும் உள்ள இந்த அறையின் மேற்பகுதியில் பால்கேனி போன்ற அமைப்பு காணப்படும். ஆசிரியர் நிற்கின்ற (அரை வட்ட வடிவப் பகுதி) பகுதியில் மாடிப்படிகள் காணப்படும். இதன் வழியாக ஏறி ஒரு சுற்று சுற்றி வந்தால் கீழே நடக்கும் வகுப்பினை நன்கு காண முடியும். வகுப்பு நடைபெறாதபோது நாங்கள் மேலே ஏறி பார்ப்பது வழக்கம்.

பால்கேனியுடன் கூடிய வகுப்பறை
இவ்வறையினை அடுத்துச் சிறிது தூரம் சென்றால் மற்றொரு வகுப்பறை காணப்படும். இந்த வகுப்பறையில் நாங்கள் படிக்கவில்லையென்றாலும் பார்த்ததுண்டு. இந்த வகுப்பறையின் கடைசி இருக்கைகள் மிக உயரத்தில் காணப்படும். விளையாட்டு மைதானத்திற்கு அருகே உள்ள இந்த வகுப்பறையில் தொடர்ந்து படிப்படியாக கீழே இறங்கிய நிலையில் பார்க்க அழகாக இருக்கும். ஆசிரியரின் பார்வையில் அனைத்து மாணவர்களும் முழுமையாகப் படும்படி சரிந்த நிலையிலான தரையில் மேசைகள் காணப்படும். இக்கல்லூரியில் இவ்வாறாக வித்தியாசமாக அமைந்த அறை இது ஒன்று மட்டுமேயாகும். 
வித்தியாசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பறை
ஒவ்வொரு அறையாகப் பார்த்துவிட்டு முதல்வர் அறை அமைந்துள்ள கட்டடத்திற்கு வந்தேன். இக்கட்டட வராந்தாவில்தான் புகுமுக வகுப்பு சேரும் நாளன்று அதிக நேரம் காத்திருந்தது நினைவிற்கு வந்தது. 

அக்கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள மாடிப்படிகளின் வழியாக இடது புறம் வழியாகச் சென்றால் நாங்கள் பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்த வகுப்பறையைக் காணலாம். முதல் தளத்தில் அமைந்துள்ளது. வகுப்பு முடிந்தபின்னரோ, வகுப்பு மாறும்போதோ இந்தப் படிகளின்வழியாகத் தான் வருவோம்.

அத்தளத்திலிருந்து எதிரே அமைக்கப்பட்டிருந்த ராமானுஜன் சிலையைப் பார்த்தோம். அதற்குப் பின் புறம் பல புதிய கட்டடங்கள் காணப்பட்டன. நாங்கள் படித்தபோது இவையனைத்தும் இல்லை.  
தொடர்ந்து அப்போது அறை எண்.44 ஆக இருந்த அறைக்குச் சென்றோம். அக்காலகட்டத்தில் இங்குதான் ஆண்டு விழாக்களும், இலக்கிய விழாக்களும் நடைபெற்றன. 

அங்கிருந்து கல்லூரியின் நூலகத்திற்குச் சென்றோம். நூலகத்தின் முன்பாக இப்போது அதிகமான மரங்களைக் காணமுடிந்தது. கல்லூரிக்காலத்தில் நூலகத்திற்கு அரிதாகவே சென்றுவந்துள்ளேன். 
கல்லூரியின் நூலகம்
நூலகத்தின் இடது புறத்தில் நாங்கள் படித்த புகுமுக வகுப்பறை இருந்தது. அதனையும் இப்போது பார்த்தேன்.  புகுமுக வகுப்பில் 1975இல் அளவையியல் (Logic) என்ற பாடத்தை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு தளம் மட்டுமே இருந்ததாக நினைவு. கல்லூரியில் சேர்ந்தபின் முதல் நாள் முதல் வகுப்பு எங்களுக்கு இந்த அறையில்தான் ஆரம்பமானது. பிற பாடங்களுக்காக அவ்வப்போது பிற வகுப்பறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இளங்கலை பொருளாதாரம் படிக்கும்போதும் இந்த முறை தொடர்ந்தது. ஆகையால் கல்லூரியில் பல வகுப்பறைகளில் அமர்ந்து படித்த அனுபவம் இருந்தது.
புகுமுக வகுப்பறை அமைந்திருந்த கட்டடம்
புகுமுக வகுப்பறையின் வெளியே, நூலகத்தைக் கடந்து வந்தபோது எதிரில் இருந்த குளத்தைக் கண்டோம். நாங்கள் படித்தபோது இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் காணப்படும். இப்போது தண்ணீர் காணப்படவில்லை. சிறிது நேரம் குளக்கரையில் நின்றுவிட்டு கல்லூரியின் பின் புற வாயிலுக்குச் சென்றோம். 


அங்கு நண்பர் மணிவண்ணனுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, கல்லூரி பற்றிய நினைவுகளை பரிமாறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.   

நண்பர் மணிவண்ணன் உடன், 9 ஏப்ரல் 2017
தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து என் மனைவி திருமதி பாக்கியவதியுடன், நான் படித்த கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரிக் கால நினைவுகளை அவருடன் பகிர்ந்துகொண்டு மறுபடியும் கல்லூரியைச் சுற்றி வந்தேன்.
மனைவி திருமதி பாக்கியவதி உடன், 7 ஆகஸ்டு 2017
1854இல் துவங்கப்பட்ட இக்கல்லூரி பல கட்டடங்கள் பொலிவிழந்து, பல இடங்களில் செடிகள் முளைத்து பராமரிப்பின்றிப் பார்த்தபோது மனம் அதிகமாக நெகிழ்ந்தது. கும்பகோணத்திற்குப் பெருமை சேர்க்கின்ற இக்கல்லூரி புதுப்பொலிவினைக் காண்கின்ற நாளை இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற நிலையில், ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

முந்தைய பதிவு :
காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (1)

Abstract of the article in English
As an alumnus of the more than one and half century old Government College for Men (Kumbakonam) (1975-79) I feel that many of its magnificent and aesthetic structures need to be protected.

07 April 2018

காக்கப்படவேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (1)

ஒருவருடைய வாழ்வில் மறக்கமுடியாத காலங்களில் ஒன்று கல்லூரிக் காலமாகும். என் கல்லூரிக்காலம் 1975-79 ஆகும். கல்லூரியில் நான் சேர்ந்த சூழலைப் பற்றி மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி என்ற தலைப்பில் பகிர்ந்திருந்தேன். 

9 ஏப்ரல் 2017 அன்று, அக்கல்லூரியில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் என் நண்பர் முனைவர் மணிவண்ணன் அவர்களின் துணையுடனும், தொடர்ந்து என் மனைவியுடனும் கல்லூரியின் வளாகத்தைச் சுற்றி வந்தேன். தற்போது பல கட்டடங்கள் களையிழந்து நிற்பதைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.  நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் 21 ஏப்ரல் 2017 அன்று அங்கு சென்று வந்து தன் அனுபவத்தை மேதையின் வகுப்பறையில் என்ற தலைப்பில் அவருடைய தளத்தில் பகிர்ந்திருந்தார். சுமார் 40 ஆண்டு காலத்தில் கல்லூரி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. காக்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய கலைப்பெட்டகத்தைக் காண வாருங்கள், செல்வோம்.

நாங்கள் படித்த காலகட்டத்தில் கல்லூரியின் நுழைவாயில் சிறியதாக இருந்தது. தற்போது அகலமான நுழைவாயில் உள்ளது. அதனைக்கடந்து உள்ளே செல்லும்போது அழகான சித்திர வேலைப்பாடுகள் சுவற்றில் காணப்பட்டன. அடுத்து, புதிதாக கட்டப்பட்ட பாலம் அமைந்துள்ளது. நாங்கள் படித்துக் கொண்டிருந்தபோது இருந்த பாலத்தைவிட இது சற்று பெரிதாக இருந்தது. செல்வோம்.
நுழைவாயில்

புதிய பாலத்தின் முன்பாக பழைய நினைவுகளுடன்
நாங்கள் படிக்கும் காலத்தில் ஆற்றில் கரை புரள தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். தற்போது நான் சென்றது கோடைக்காலமாதலால் ஆங்காங்கே தண்ணீர் காணப்பட்டது. புகுமுக வகுப்பு சேர்ந்துவிட்டு மகிழ்ச்சியில் வந்தது, கும்பகோணம் நண்பர்களுடன் கும்மாளமிட்டுக்கொண்டே சென்றது, கல்லூரி தேர்தலின்போது நண்பர் ஜனத்தீன்ராஜுக்காக பாலத்தின் இரு பக்கங்களிலும் நின்றுகொண்டு ஆதரவு திரட்டியது போன்ற பல நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.  கும்பகோணத்தில் மகளிருக்கான கல்லூரி (Government College (Women) அரசலாற்றங்கரையையொட்டி இருந்தபோதிலும், நாங்கள் இங்கு சேர்ந்த காலகட்டத்தில்தான் முதல் முதலாக மாணவிகள் சில வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர்.   
பாலத்தின் இடது புறத்தில் காவிரியின் தோற்றம்
பாலத்தின் அடுத்த பக்கத்தை நெருங்கும்போது கல்லூரிக்கு அடையாளமான மணிக்கூண்டு (clock tower அல்ல bell tower) கண்ணுக்கு அருகில் வர ஆரம்பித்தது. 
பாலத்தின் மறு முனையில் உள்ள நுழைவாயில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் என்ற பெயர் எழுதப்பட்டிருந்த வளைவிற்கு இடப்புறம் நாங்கள் படித்த பொருளாதார வகுப்புகளின் அறைகள் உள்ளன. தற்போது அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி சிமெண்ட் சுவரால் அடைக்கப்பட்டிருந்தது.  அழகான ஜன்னல் அமைப்பு, அதற்கு மேல் காற்றோட்டத்திற்கான அமைப்பு, மூன்று புறமும் கட்டுமானப்பகுதியைத் தாங்குமளவு அமைக்கப்பட்டுள்ள மர அமைப்புகள் வகுப்பறைக்கு அழகைத் தந்துகொண்டிருந்தன. தற்போது பொலிவிழந்த நிலையில் அதனைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. இந்த வகுப்பறையின் எதிரே காவிரி ஆற்றங்கரையின்  படித்துறையைக் காணலாம். தற்போது இவ்வழி அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான படித்துறைகள் கல்லூரி வளாகத்தை ஒட்டி மூன்று இடங்களில் காணப்படும்.  
நாங்கள் படித்த இளங்கலை பொருளாதார வகுப்பு அறை 
(இதன் வாயில் எதிரே படித்துறை உள்ளது) 
இடது புறம் வகுப்பறையைப் பார்க்க முடியாத நிலையில், வலது புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கு ஆங்கிலேய கலைப்பாணியையும் நம் கலைப்பாணியையும் நினைவுபடுத்துகின்ற அமைப்பிலான மணிக்கூண்டு, அதனுடன் கூடிய தளம் உள்ளது. சற்று கூர்ந்து கவனித்தால் கோயிலின் முக மண்டபத்தில் இருக்கின்றோமோ என்று எண்ணத்தோன்றும். 
அந்த இடத்திற்கு நேராகப் போவதற்கு எத்தனிக்கும்போதுதான் அந்தப் பாதையில் சிறிது தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. கல்லூரி நாள்களில் இந்த பாதையில் நாங்கள் ஒவ்வொரு தூணாக நின்று பார்த்துக் கொண்டும் ரசித்துக்கொண்டும் நடந்து வந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. அங்குதான் புவியியல் வகுப்பிற்கான ஆசிரியர் அறை இருந்தது. ஒவ்வொரு தூணிலும் நான்கு புறமும் சிற்பங்களைக் காணமுடியும். தூண்களில் மட்டுமன்றி மேற்கூரையைத் தாங்க அமைக்கப்பட்டுள்ள மரங்களிலும் சிற்பங்கள் உள்ளன. 

இந்த சிற்பங்கள் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலிலும்கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் உள்ள கற்சிற்பங்களை போல நேர்த்தியாக, அதே சமயத்தில் மரத்தில் வடிவமைக்கப்பட்டவை. இக்கட்டடத்தைக் கட்டும்போது கோயில் கட்டுமானத்தின் தாக்கமும் அப்போதைய கட்டடக்கலை வல்லுநர்களுக்குத் தோன்றியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது. தற்போது பாதி இடம் சிமெண்டால் அடைக்கப்பட்ட நிலையில் கீழே இருந்து அனைத்தையும் ரசிக்கும் நிலை ஏற்பட்டது. மீதியுள்ள தூரத்தில் நடந்து செல்லும்போது கோயிலின் திருச்சுற்றில் சுற்றி வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. கட்டடத்தின் மேல் பகுதியைத் தாங்கும் அமைப்பில் குறுக்காக சிறிய அளவிலான மர உத்திரங்கள் காணப்பட்டன.  எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு அந்த கட்டடப்பகுதி காணப்பட்டது.   


புகுமுக புவியியல் வகுப்பிற்கான ஆசிரியர் அறை இருந்த பகுதி

தூண்களின் நான்கு புறமும் சிற்பங்கள்
மேற்கூரையைத் தாங்கும் (இரு தூண்களுக்கிடையே அதன் மேல் பகுதியில்) மரத்திலும் சிற்ப வேலைப்பாடுகள்

ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே மணிக்கூண்டை நெருங்கியபோது மணிக்கூண்டு அமைந்துள்ள கட்டுமானப்பகுதியில் உள்ள அழகான சிற்பங்களும், மரத்தாலான தூண்களும் பொலிவிழந்த நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது.  

மணிக்கூண்டின் அடிவாரப்பகுதியின் வழியாக அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பாக என்னையும் அறியாமல் வலது புறம் சென்றேன். வேலைப்பாடான தூண்கள் நிறைவடைகின்ற அந்தப் பகுதியில் நாங்கள் புகுமுக வகுப்பு படித்தபோது மொழிப்பாடத்திற்கான இருந்த வகுப்பறையாகும். ஜன்னல்கள் பராமரிப்பின்றி, வகுப்பறை பயன்பாடின்றி இருந்ததைக் காணமுடிந்தது. இந்த வகுப்பறையிலிருந்து அடுத்தடுத்து உள்ள மூன்று வகுப்பறைகளும் உள்ளேயிருந்தே செல்லும் வகையில், சுற்று வட்ட வடிவில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறே இந்த வகுப்பறைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவாயில்கள் உண்டு.   

கடைசி தூணுக்கு அருகே தெரிவது 
நாங்கள் புகுமுக வகுப்பின்போது மொழிப்பாடம் படித்த வகுப்பறை
புகுமுக வகுப்பில் நாங்கள் படித்த வகுப்பறை தற்போது பயன்படுத்தப்படா நிலையில் இருந்ததை ஏக்கமாக கண்டு சற்று அங்கு நின்றேன். நின்றபோது, படிக்கும் காலத்தில் இடைவேளையில் வகுப்பறையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறையில் எதிரில் உள்ள படித்துறையில் நின்று டிபன் பாக்சைக் கழுவிய நாள்கள் நினைவிற்கு வந்தன. ஒரு முறை கை நழுவி டிபன் பாக்ஸ் மூடியுடன் மிதந்து செல்ல, நாங்கள் கரையோரமாக ஓடிக் கொண்டே வர அருகே நீந்திக் கொண்டிருந்த சிறுவர்கள் எங்களுக்கு அதனை எடுத்துக் கொடுத்தது இப்போது நினைவிற்கு வந்தது. 

அதிகம் ஆக்கிரமித்த நினைவுகளுடன் மணிக்கூண்டு அமைந்துள்ள பகுதியின் கீழ்த்தளம் வழியாக உள்ளே சென்றோம். கோயில் மணி போல அமைந்துள்ள அந்த மணியை அடிப்பதற்கான கயிறு கீழே வரை காணப்படும். நாங்கள் படித்த காலத்தில் மணியடிக்கும் பணியில் இருந்தவரை முழியன் என்போம். அவர் சற்று பெரிய விழிகளுடன் காணப்படுவார். மாணவர்கள் போராட்டம் செய்யும்போது அவரை அங்கிருந்து அகற்றிவிட்டோ, ஏமாற்றிவிட்டோ மாணவர்கள் கயிறை இழுத்து மணியை அடிப்பர். கல்லூரி முடிந்துவிட்டது என்றோ வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றோ தெரிவிக்கவும், மாணவர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கவும் இந்த உத்தியை அப்போது பயன்படுத்தினர். அனைத்து மாணவர்களும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்துவிடுவர்.
மணிக்கூண்டு அமைந்துள்ள பகுதியின் தரை தளம்
மணிக்கூண்டுக்கு செல்வதற்கான மாடிப்படிகள்
மணிக்கூண்டின் கீழ் பகுதியில் சிறிது நேரம் நின்றபோது படித்த காலத்தில் அடித்த மணியோசை கேட்பதைப் போல இருந்தது. 

அங்கிருந்து அலுவலகப்பகுதிக்குச் செல்வதற்காக உள்ளே நடந்து சென்றபோது வலது புறத்தில் ஒரு வகுப்பறை மிகவும் பொலிவுடன் காணப்பட்டது. வரலாற்றைப் பற்றியும், கடந்து சென்ற நாட்களைப் பற்றியும், கலையழகைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டே சென்றபோது அந்த வகுப்பறை என் சிந்தனையை வேறு பக்கம் திருப்பியது. படித்த காலத்தில் இந்த வகுப்பறை வழியாக நாங்கள் பல முறை எங்கள் வகுப்பறைக்குச் சென்றுள்ளோம். அந்த வகுப்பறை வாயிற்கதவின்மீது அவ்வறையின் சிறப்பைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. நாங்கள் படித்த காலத்தில் அதுபற்றி பேசப்படவே இல்லை. அவ்வாறான முக்கியத்துவமும் எங்களுக்குத் தெரியாது. அந்த அறையின் சிறப்பைக் காணவும், புகுமுக வகுப்பில் நாங்கள் படித்த வகுப்பறையைக் காணவும் தொடர்ந்து செல்வோம்.........

Abstract of the article in English
As an alumnus of the more than one and half century old Government College for Men (Kumbakonam) (1975-79) I feel that many of its magnificent and aesthetic structures need to be protected. (to be continued...)

31 March 2018

திருஏடகம் ஏடகநாதர் கோயில்

தஞ்சாவூரில் 8 அக்டோபர் 2017 அன்று ஏடகம் (ஏடு+அகம் = ஏடு இருக்கும் இடம்) என்ற அமைப்பு நண்பர் திரு மணி.மாறன் முயற்சியாலும் நண்பர்களின் ஒத்துழைப்போடும் தொடங்கப்பெற்று இலக்கியம், வரலாறு, சுவடியியல் என்ற பல துறைகளில் பங்களிப்பினை ஆற்றிவருகிறது. அந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது, ஏடகம் என்ற சொல்லோடு தொடர்புடைய, மதுரை அருகே உள்ள திருவேடகம் கோயிலுக்கு டிசம்பர் 2015இல் சென்றது நினைவிற்கு வந்தது. வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.

திருஏடகம் (திருவேடகம்) ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டம் வட்டத்தில் சோழவந்தான் அருகில் திருவேடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும்.  நகரப் பேருந்துகள் மதுரையிலிருந்து சோழவந்தானுக்கு உள்ளன. சோழவந்தான் தொடர் வண்டி நிலையம் கோயிலிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவேடகம், ஞானசம்பந்தரின் திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தினை எதிர்த்து கரையை அடைந்த பெருமையைக் கொண்ட ஊராகும். வைகையின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றபோது பாண்டிய மன்னரின் மந்திரி குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி வைகையாற்றின் நீரோட்டத்தினை எதிர்த்துச் செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து சென்றதாகவும், வைகையாற்றின் கரையில் அது ஒதுங்கியதாகவும், ஏடு ஒதுங்கிய இடத்தில் சிவலிங்கத்தைக் கண்ட மன்னர் அங்கு ஒரு கோயில் அமைத்ததாகவும் கூறுகின்றனர். 

இக்கோயிலில் உள்ள மூலவர் ஏடகநாதர் ஆவார். இறைவி ஏழவார்குழலி. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன.
அடுத்தடுத்து மூலவர் சன்னதியும், இறைவி சன்னதியும் தனித் தனியாக கோபுரங்களைக் கொண்டு அமைந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து இரு சன்னதிகளும் தனித்தனியாக இரு சிறிய கோபுரங்களைக் கொண்டுள்ளன.

ஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையில், இப்பதிகத்தின் பாடலில் ஏடு வைகையாற்றின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல வரலாற்றின் சான்றாகக் கூறப்பட்டுள்ள பாடலின் பொழிப்புரையைக் காணலாம்.
"யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளில் இருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்."திருவேடகம் சென்று திரும்பும்போது ஞானசம்பந்தர் பாடல் பெற்ற மற்றொரு தலமான திருவாப்புடையார் கோயிலுக்குச் சென்றோம்.  திருஆப்பனூர் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் மூலவர் இடபுசேரர், ஆப்புடையார், அன்னவினோதன் என்றழைக்கப்படுகிறார். இறைவி குரவங்கழல் குழலி ஆவார். கோயில் பூட்டியிருந்தபடியால் உள்ளே செல்லமுடியாமல் போனது. இருப்பினும் அடுத்தடுத்து ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்ற மன நிறைவோடு, வாசலில் இருந்தே இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.


மதுரை மாவட்டத்தில் பாடல் பெற்ற தலங்களாக திருஆலவாய் (மதுரை), திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருஏடகம், கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், இராமேஸ்வரம், திருஆடானை, திருக்கானப்பேர், திருப்பூவணம் (திருப்புவனம்), திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய 14 தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மதுரை, திருப்பரங்குன்றம், திருப்புத்தூர், இராமேஸ்வரம், திருப்புவனம், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய தலங்களுக்குச் சென்றுள்ளேன். 7 டிசம்பர் 2015இல் திருஏடகம் மற்றும் திருஆப்பனூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள பிற கோயில்களுக்குச் செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். 

துணை நின்றவை:
திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில் (விக்கிபீடியாவில் உள்ள புகைப்படங்கள் நான் கோயிலுக்குச் சென்றுவந்தபின் இணைக்கப்பட்டவை)